science

img

வேளாண்மையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை முறைகளும் பயன்களும்

கடந்த சில ஆண்டுகளாக இயற்கை வேளாண் சாகுபடி முறைகளில் தமிழக விவசாயிகள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். குறைந்த செலவில், தங்கள் பண்ணைகள், தோட்டங்களில் கிடைக்கும் இயற்கை வேளாண் இடு பொருட்களை கொண்டும், சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான மாசுபாட்டை ஏற்படுத்தாமலும், பின் அல்லது பக்க விளைவுகள் இல்லாத விவசாய சாகுபடி முறைகள் நகர்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களில் மிகுந்த வரவேற்பு பெற்று வருகிறது.மறுபுறம் மத்திய மற்றும் மாநில அரசுகள் வேளாண் இடுபொருட்களுக்கு வழங்கி வரும் மானியங்கள் குறைந்து வரும் நடைமுறை சூழலில் வேளாண் உற்பத்தி செலவுகள் பெருகி வரும் சூழலுக்கும் மாற்றாக இயற்கை வேளாண் இடுபொருட்களை பயன்படுத்தி வேளாண் மற்றும் தோட்டக்கலை பயிர்களை சாகுபடி செய்யும் போக்கு நமது விவசாயிகளிடம் பெருகி வருகிறது. இத்தகைய நடைமுறை சூழலில் நமது இயற்கை உரங்களிலிருந்து கிடைக்கும் பேரூட்ட சத்துக்களின் சதவீதம் பற்றி விவசாய பெருமக்கள் தெரிந்து கொள்வது அவசியம்.

இயற்கை உரங்கள்            தழை         மணி            சாம்பல்
சாண எரு, தொழு எரு         1.22                0.62                   1.20
வெள்ளாட்டு உரம்                  2.4                 0.9                    2.0
செம்மறியாட்டு உரம்          1.93                 1.3                     2.3
கோழி உரம்                            0.92              1.88                     0.6
நகராட்சி கழிவு உரம்           0.40               0.60                    0.40
பன்றிச் சாணம்                      3.70              3.30                    0.40
மீன் கழிவு                               6.80             7.10                    1.00 
தோல் கழிவு                           8.00              0.10                    -
சணப்பு                                      2.30               0.50                 1.80
தக்கைப்பூண்டு                       3.50              0.60                  1.20
அவுரி                                        2.40              0.30                  0.80
கிளைரிகிடியா                       2.90                0.50                 2.30
ஆடாதொடா                          2.80                0.70                 3.20
எருக்கள்                                 2.10                0.70                 3.60
பூவரசு                                      2.50               0.60                 2.00
புங்கம் தழை                         3.00                0.40                 2.20
பயிர் கழிவு கம்போஸ்ட்   1.20                 0.40                1.00
மண்புழு உரம்                       2.40                3.40                1.00
கரும்பாலைக் கழிவு           1.5                  2.00                1.50
தென்னை நார் கம்போஸ்ட்    3.6               2.9                2.10
கடலைப் பிண்ணாக்கு              7.3              1.5               1.35
எள்ளு பிண்ணாக்கு                  6.7                 2.4             1.2
வேப்பம் பிண்ணாக்கு             5.2                  1.0              1.4
ஆமணக்கு பிண்ணாக்கு          4.3               1.8               1.3
புங்கம் பிண்ணாக்கு                  4.2                 9.0                -
பருத்தி பிண்ணாக்கு                 6.4                 2.9            2.2

மேலும் சாம்பல்களில் தழைச்சத்து இன்றி ஓரளவு தானிய சத்தும், சாம்பல் சத்தும் மட்டுமே உள்ளது. இத்துடன் மரச் சாம்பலில் மட்டும் 5 சதவீதம், இதர சாம்பல்களில் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே சாம்பல் சத்து உள்ளதாக வேளாண் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.இவையாவும் வயல்களில் / தோட்டங்களில் இடும்போது பயிர்களுக்கு தேவைப்படும் நுண்ணூட்டங்கள் கிடைப்பதுடன் நுண்ணுயிர்கள் பெருகி நிலம் வளம் பெறும். பசுத்தாள் பயிர்களில் ஈடும்போது இளந்தளிர்களின் வளர்ச்சிக்கு தேவைப்படும் நுண்ணூட்டங்கள் கிடைக்கும். மேலும் மாட்டெருவை விட ஆட்டெருவில் சத்துக்கள் குறிப்பாக தழைச்சத்தும் சாம்பல் சத்தும் கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளதை விவசாய பெருமக்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். இயற்கை உரங்கள் வாயிலாக அனைத்து ஊட்டங்களையும் பயிர்களுக்கு வழங்க முடியும் என்றாலும் நடைமுறை சூழலில் இது சாத்தியம் அல்ல. ரசாயன உரங்களையும் பயன்படுத்தினால் மட்டுமே பயிர்களின் வளர்ச்சி பருவத்திற்கு ஏற்ப ஊட்டச்சத்துக்களை வழங்கி அதிக அளவு உற்பத்தி மற்றும் உற்பத்தி திறனை நடைமுறையில் ஈட்ட முடியும். செயற்கை அல்லது ரசாயன உரங்களில் உள்ள சத்துக்களை பற்றியும் விவசாயிகள் தெரிந்து கொள்வது அவசியம்.

ரசாயன                  உரம்    தழை    மணி   
யூரியா                      46.0      -
அம்மோனியம்
சல்பேட்                  20.6        - 
அம்மோனியம்
குளோரைடு           25.0        -
கால்சியம்
அம்மோனியம்
நைட்ரேட் டை      26.0      -
அம்மோனியம்
பாஸ்பேட்                 18.0    46.0
சூப்பர் பாஸ்பேட்       -       16.0
ராக் பாஸ்பேட்            -      18-20

இது தவிர வேளாண் சந்தைகளில் விற்பனை செய்யப்படும் பல்வேறு கலப்பு உரங்களில் அவற்றின் சத்துக்களின் அளவு குறிக்கப்பட்டிருக்கும்.விவசாயிகள் தங்கள் வயல்கள், தோட்டங்களில் மண் பரிசோதனை செய்தும் சாகுபடி செய்யப்படும் பயிர்களின் தேவை, வளர்ச்சி பருவங்கள் அடிப்படையில் இயற்கை மற்றும் செயற்கை உரங்களை சூழலுக்கேற்றவாறும், வாய்ப்புகளுக்கு ஏற்றவாறும், ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை (Intergratid Nutrient Management) முறைகள் வாயிலாக பயிர்களுக்கு வழங்கி பயிர்களுக்கு தேவைப்படும் சத்துக்களை குறித்த காலத்தில் வழங்கி குறைந்த செலவில் விஞ்ஞான அடிப்படையில் வேளாண் மற்றும் தோட்டக் கலைப் பயிர்கள் சாகுபடியில் ஈடுபட்டு அதிக மகசூல் மற்றும் லாபம் பெறலாம்.

====பேரா. தி.ராஜ்பிரவீன்===

;